Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகரில் ஓடும் பஸ்களில் கைக்குழந்தைகளுடன் சென்று பணம், நகைகளை திருடிய 2 பெண்களை போலீசார் குழந்தைகளுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓடும் பஸ்சில் தொடர் திருட்டு
திருப்பூர் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக ஓடும் பஸ்சில் நகை–பணம் திருட்டு போவது அதிகரித்து வந்தது. இந்த சம்பவங்களை தடுத்து, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் ஆலோசனையின் பேரில் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் உத்தரவிட்டார்.
அதன்படி, திருப்பூர் உதவி கமிஷனர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பயணிகள் போல் கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரில் டவுன் பஸ்களில் பயணம் செய்து கண்காணித்து வந்தனர்.
2 பெண்கள் குழந்தைகளுடன் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள புஷ்பா பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ்சில் ஏறி போலீசார் பயணம் செய்தனர். அப்போது கைக்குழந்தைகளுடன் ஏறிய 2 பெண்கள், ஒரு பயணியிடம் இருந்து பணத்தை திருடிவிட்டு குமார்நகர் பஸ்நிறுத்தத்தில் இறங்கி ஓடினார்கள். உடனே போலீசார் அந்த 2 பெண்களையும் விரட்டி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதுரை வண்டிப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவிகள் கவுசல்யா(22), அருணா(30) என்பதும், இவர்களின் குழந்தைகள் ஜமுனா, சந்தோஷ் என்பதும் தெரியவந்தது. மேலும், கவுசல்யாவும், அருணாவும் குழந்தைகளுடன் பஸ்களில் ஏறி, பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடம் இருந்து நகை–பணத்தை திருடியுள்ளனர். வடக்கு போலீஸ் நிலைய பகுதியில் ஒரு பஸ் பயணியிடம் 14¾ பவுன் நகை, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் ஒரு பஸ்பயணியிடம் ரூ.25 ஆயிரம், திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய பகுதியில் 3 பயணிகளிடம் ரூ.4¾ லட்சத்தையும், 13½ பவுன் நகையையும் திருடி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கவுசல்யா, அருணா ஆகிய 2 பேரையும் குழந்தைகளுடன் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 comments: