Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உடுமலை அருகே ஊருக்குள் சுற்றிவரும் சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிறுத்தைப்புலி
உடுமலை அருகே உள்ள அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றி வருகிறது. கன்றுக்குட்டி, நாய்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வரும் சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் ஊருக்குள் சாவகாசமாக ரோட்டை கடந்து செல்வதை பொதுமக்கள் பார்த்து உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற பகுதிக்கு அருகில் சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக கூண்டு ஒன்றையும் வைத்துள்ளனர். கூண்டு வைத்து 3 நாட்கள் மேலாகியும் சிறுத்தைப்புலி சிக்கவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று இந்த பகுதிக்கு திடீரென்று வந்து சிறுத்தைப்புலியினை பிடிக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மேலும் சில பகுதிகளில் கூண்டுகள் வைத்து விரைவில் சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்க எடுக்க வேண்டும். பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று டாம் டாம் மூலமும், பிளக்ஸ் பேனர்கள், துண்டுபிரசுரங்கள் மூலம் மக்களை எச்சரிக்கவேண்டும்.
விரைவில் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாலை வேளையில் விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிப்படைய கூடும். எனவே சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடனடியாக புதர்மறைவான பகுதிக்கு மாற்றி வைக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது உடுமலை ஆர்.டி.ஓ. குணசேகரன், தாசில்தார் சைபுதீன், மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், அமராவதி வனச்சரக அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0 comments: