Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
முத்தூர் அருகே மு.வேலாயும்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஒரு செடியில் 40 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு உருவாகியுள்ளது.
மரவள்ளி கிழங்கு செடி
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மரவள்ளி கிழங்கு குச்சியை பள்ளி வளாகத்தில் ஊன்றி வைத்து தினமும் நீர் பாய்ச்சி வந்தனர். இந்த மரவள்ளி கிழங்கு செடி சுமார் 7 அடிக்கு மேல் நன்கு வளர்ந்து விட்டது.
40 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரிய–ஆசிரியைகள் இந்த மரவள்ளிகிழங்கு செடியை வெட்டிவிட்டு அடியில் தோண்டி பார்த்தபோது மரவள்ளி கிழங்கு நீண்டதாகவும், உருண்டையாகவும் மிகப்பெரிய ராட்சத அளவில் பெரிய கிழங்காக இருந்ததை கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் நேரில் வந்து இந்த பெரிய மரவள்ளி கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர். இந்த மரவள்ளி கிழங்கு சுமார் 40 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது.
ஆச்சரியம் அளிக்கிறது
இதுபற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:– மரவள்ளிகிழங்கு கிழங்கு வகையை சேர்ந்ததாகும். இந்தியாவில் மரவள்ளிகிழங்கு நேரடியாக வேகவைத்த உணவுப்பொருளாகவும், ஜவ்வரிசி, பாயாசம், சிப்ஸ் மூலப்பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு இனிப்பு மற்றும் கசப்பு ஆகிய 2 வகைகளில் உள்ளது. மரவள்ளி கிழங்கின் உள்ளே இறுகிய நிலையில் வெண்மை நிறத்தில் மாவுப்பொருள் உள்ளது. மரவள்ளி கிழங்கு கால்நடை தீவனம், ஆல்கஹால் தயாரிப்பதற்கு உபரி மூலப்பொருளாக பயன்படுகிறது. மரவள்ளி கிழங்கு செடி 1 வருட பயிராகும். சாதாரணமாக மரவள்ளி கிழங்கு செடியை அறுவடை செய்யும்போது கிழங்கு ஒன்று 1 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். இந்த அரசு பள்ளியில் ஒரு செடியில் உருவான மரவள்ளிகிழங்கு மிகப்பெரிய அளவில் அதிக எடை கொண்டதாக உருவாகியுள்ளது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

0 comments: