Sunday, September 07, 2014

On Sunday, September 07, 2014 by farook press in ,    
திருப்பூரில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளைகளை சிலர் வெட்டி அகற்றினார்கள். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி 500 கிலோ மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 49–வது வார்டுக்கு உட்பட்ட கருவம்பாளையம், வெடத்தலங்காடு 4–வது வீதியில் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையோரம் உள்ளன. இந்த பகுதியில் மின்கம்பிகளின் மீது மரக்கிளைகள் மோதி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், நேற்று காலை சாலையோரம் இருந்த 10–க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியவர்களை எச்சரிக்கை செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பொது இடத்தில் இருந்த மரக்கிளைகளை வெட்டக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும் சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவன், வருவாய் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வெட்டப்பட்ட மரக்கிளைகள் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன. சுமார் 500 கிலோ எடையுள்ள அந்த மரக்கட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேனில் ஏற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
பொதுஇடங்களில் இருந்த மரக்கிளையை வருவாய்த்துறைக்கு தெரியாமல் வெட்டிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவன், திருப்பூர் சப்–கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இதனால் அந்த பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: