Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள பதவிகளுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு உள்பட மொத்தம் 35 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

7 உள்ளாட்சி பதவிகள்

பின்னர் கடந்த 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின்படி ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு, பவானி நகராட்சி 7-வது வார்டு, சத்தியமங்கலம் ஒன்றியம் 15-வது வார்டு மற்றும் கோபி ஒன்றியம் 8-வது வார்டு ஆகிய 6 வார்டு கவுன்சிலர் பதவி மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜன் நகர் ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. பிற பதவிகளுக்கும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

24 பேர் போட்டி

ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 8 பேர் போட்டியில் உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1.டி.பாலசுப்பிரமணியம் (அ.தி.மு.க.)

2.பி.பிரபு (காங்கிரஸ்)

3.கே.மணி (பா.ஜனதா),

4.பி.ராஜா (மா.கம்யூனிஸ்டு)

5.கே.சுரேஷ் (சுயே.)

6.செந்தில்குமார் (சுயே.)

7.மெய்வேல்(சுயே.)

8.மோகனசுந்தரம் (சுயே.)

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 24 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்குகிறது

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கை விரலில் வைக்கப்படும் மை மற்றும் தேர்தலுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு அந்தந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

0 comments: