Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
கதிரம்பட்டி மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அடிப்படை வசதிகள்

கதிரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வடிகால் வசதி, மின்சார வசதி, ரோடு வசதி உள்பட பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

இங்குள்ளவர்கள் வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி ஆகியவையும் அரசுக்கு செலுத்தி வருகின்றனர். மேலும் அரசின் சார்பில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவையும் இங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ. தலைமையில் மனு

இதேப்பகுதியில் மின்வாரியத்தின் துணை மின்நிலையமும், மின்வாரிய குடியிருப்புகளும் உள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த கிராமம் என்ற ஜனாதிபதி விருதையும் இந்த கிராமம் பெற்று உள்ளது. எனவே இங்குள்ளவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வீடுகளை அகற்ற...

கதிரம்பட்டி ஊராட்சியில் மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு வேறு வீடுகள் எதுவும் இல்லை.

இந்தநிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் வீடுகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே இங்குள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதில், மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஈரோடு ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மாள் முத்துசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: