Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.

அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.

போலீஸ் விசாரணை

இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.


0 comments: