Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    


டிராகுலா (Dracula) என்றாலே ஆங்கில பேய்ப்பட ரசிகர்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். தமிழில் ரத்தக் காட்டேரி என்றும் பிற்கால ஐரோப்பாவில் வேம்பயர் (vampire) என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த டிராகுலாவின் வரலாறு என்ன? அந்த வரலாற்றை ஆராய்ந்தால் டிராகுலா நாம் நினைப்பது போல் ரத்த வெறியன் இல்லை என்பதும் அவனது கொடூரங்களுக்கு ஒரு காரணம் இருந்திருப்பதும் தெரிய வருகிறது. அதனால் டிராகுலாவின் வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.
ஹங்கேரி நாட்டில் 1431ஆம் ஆண்டு வலேசியா (wallachia) எனும் சிறுநாட்டின் மன்னர் வம்சத்தில் பிறந்தவன், விளாட் டிராகுல். இவனே பிற்காலத்தில் விளாட் தெ இம்பேலர் (கழுவேற்றும் விளாட் - Vlad the Impaler), கவுண்ட் டிராகுலா (Count Dracula) என்ற பெயரில் புகழ் பெற்றவன்.
அன்று கிழக்கு ஐரோப்பா எதிர்கொண்ட மிக முக்கிய சக்தி, ஆட்டோமான் (Ottomon Turks) துருக்கிய சாம்ராஜ்யம். டிராகுலாவின் தந்தை, துருக்கிய சுல்தானுக்குக் கப்பம் கட்டி வந்தார். ஒருதரம் கப்பப் பணம் கட்டத் தாமதமாகவே, தன் இரு பிள்ளைகளான விளாட் மற்றும் ராடு (Radu the Handsome) இருவரையும் பணயக் கைதிகளாக ஆட்டொமான் சுல்தான் அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். கப்பத் தொகை கட்டி முடிக்கும்வரை இரு பிள்ளைகளும் சுல்தானிடம் கைதியாக இருந்தார்கள். 
இந்தச் சூழலில் ராட் சின்ன நாடான வலேசியாவின் மன்னனாவதை விட அன்றைய வல்லரசான துருக்கியில் இருந்தால் தான் தன் எதிர்காலத்துக்கு நல்லது என நினைத்து முஸ்லிம் மதத்துக்கு மாறி, சுல்தானின் படையணியில் சேர்ந்துவிட்டான். மனம் மாறாத விளாட், தன் தந்தையுடன் வலேசியா திரும்பினான். அதன்பின் சுல்தானுக்கு நாணயமாகக் கப்பம் கட்டி வந்தார் விளாடின் தந்தை. அவரது அரியணைக்கு ஆபத்து வந்தபோது சுல்தானும் அவரது உதவிக்கு வந்தார். இந்தச் சூழலில் விளாட், தன் தந்தை மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தான்.
விளாடுக்கு 18 வயது ஆகையில் 1459ஆம் ஆண்டு, அன்றைய போப் இரண்டாம் பயஸ் (Pious II) சிலுவைப் போரை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் அனைவரும் அப்போரில் இணைந்து, ஆட்டோமான் சுல்தானுடன் போரிடுவது கடமை ஆனது. சுல்தானுக்குக் கப்பம் கட்டி வாழும் நிலையை அறவே வெறுத்த விளாட், சிலுவைப் போரில் இணைந்து கொண்டான். கப்பம் கட்டுவதையும் நிறுத்தினான். அதனால் கோபம் அடைந்த சுல்தான் மஹமது (Sultan Mehmed), கப்பத் தொகையை வாங்கி வர அதிகாரிகள் இருவரை அனுப்பினார்.
அதிகாரிகள் அரசவையில் நுழைந்து, விளாடுக்காகக் காத்திருந்தார்கள். விளாட் வந்ததும் ஒட்டுமொத்த அரசவையே எழுந்து நின்று வணங்கியது. இரு அதிகாரிகளும் எழுந்து நிற்கவில்லை. மரியாதைக்காகத் தொப்பியைக் கழற்றி, வணக்கம் செலுத்தவும் இல்லை. சுல்தானின் தூதர்கள், தம்மை விட அந்தஸ்தில் குறைந்த கப்பம் கட்டும் குறுநில மன்னன் முன் தொப்பியைக் கழற்றுவது வழக்கமில்லை என அதற்குக் காரணமும் கூறினார்கள்.

"சரி, இனி நீங்கள் ஆயுளுக்கும் தொப்பியைக் கழற்றவே வேண்டாம்" எனக் கூறிய விளாட் தொப்பியை அவர்கள் தலையுடன் சேர்த்து ஆணி அடிக்க உத்தரவிட்டான். அலறித் துடித்த ஆட்டோமான் தூதர்கள், என்ன கெஞ்சியும் மன்னிப்பு கேட்டும் விடாமல், அவர்களைப் பிடித்த வீரர்கள், அவர்கள் தலையில் தொப்பியுடன் சேர்த்து ஆணி அடித்துக் கொன்றார்கள்.
தூதர்கள் கொல்லப்பட்டவுடன் கடுமையான சீற்றம் அடைந்த சுல்தான் மஹமது, சிலுவைப் போருக்கு மத்தியிலும் விளாடைக் கொல்ல ஒரு படையை ஹம்ஸா பே (Hamza Bey) என்பவர் தலைமையில் அனுப்பினார். அவர்கள் ஒரு குறுகலான மலைப் பாதையைக் கடக்கையில் எதிர்பாராவிதமாக தாக்குதல் நடத்தி அவர்களை முறியடித்த விளாட், பிடிபட்ட அத்தனை துருக்கிய வீரர்களையும் கழுவேற்றினான். படைத் தளபதி ஹம்ஸா பே, தன் அந்தஸ்தைக் குறிக்கும் விதத்தில் உயர்ந்த கழுமரத்தில் கழுவேற்றப்பட்டார்.

0 comments: