Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.

0 comments: