Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by farook press in ,    
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். இதைதொடர்ந்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கோவை வருகை
கோவை மாநகராட்சி தேர்தல் வருகிற 18–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோவையில் 12–க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
சுற்றுப்பயணம்
இந்த நிலையில் கோவை மேயர் வேட்பாளர் கணபதிராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். அவருடைய சுற்றுப்பயண விவரம் வருமாறு:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4 மணியளவில் கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலைய வரவேற்பை முடித்துக் கொண்டு ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலை யில் உள்ள அண்ணா சிலை இருக்கும் இடத்துக்கு வருகிறார். அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார்.
சென்னை திரும்புகிறார்
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஜெயலலிதா கார் மூலம் அருகில் உள்ள வ.உ.சி.பூங்கா மைதானத்துக்கு வருகிறார். அங்கு கோவை மேயர் வேட்பாளராக போட்டியிடும் கணபதிராஜ்குமாரை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் அவர் கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
விழாக்கோலம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோவை வருகையையொட்டி கோவை விழாக்கோலம் பூண்டுள்ளது. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் கோவை அவினாசி சாலை மற்றும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அ.தி.மு.க கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன, விமான நிலையம் முதல் வ.உ.சி. பூங்கா வரை உள்ள அவினாசி சாலையில் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் ஏராளமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆங்காங்கே ஜெயலலிதாவின் பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவினாசி சாலையின் இரண்டு புறமும் அ.தி.மு.க, கொடிகள் கட்டப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் வ.உ.சி. பூங்கா மைதானத்தை சுற்றிலும் இரவை பகலாக்கும் வகையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பேசுவதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகர போலீசார் மற்றும் திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக் கல், கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், தஞ்சை ஆகிய மாவட்ட போலீசாரும் கோவைக்கு இன்று வருகிறார்கள். முதல்–அமைச்சர் வருகைக்காக கோவை மாநகர போலீசார் 1,500 பேர் மற்றும் வெளிமாவட்ட போலீசார் 1,500 பேர் என்று மொத்தம் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்–அமைச்சர் கோவை வருகையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவைக்கு வரும் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வ.உ.சி.பூங்கா மற்றும் அண்ணா சிலை ஆகிய இடங்களில் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 comments: