Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by farook press in ,    
தமிழக மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
பாராட்டு விழா
திருப்பூர் சிறு குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு பாராட்டு விழா திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமணமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுகுறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கலைமோகன் தலைமைதாங்கினார். பாரதீய ஜனதா கட்சியின் 4–வது மண்டல துணைத்தலைவர் குமார், ஆர்.எஸ்.எஸ்.மண்டல தலைவர் பழனிசாமி, சங்கத்தின் செயலாளர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தொழிலுக்கு முக்கியத்துவம்
இந்திய நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர் கிடைத்திருக்கிறார். 1977–ல் நடைபெற்ற மொராஜிதேசாய் ஆட்சிக்கு பின் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சி அமைந்துள்ளது. நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் ஆட்சி அமைப்பவர்கள் நல்ல கட்சியினை சார்ந்து இருக்க வேண்டும். கட்சி தான் ஆட்சிக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பாலம். இந்தியாவின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. சாதாரண கிராமமாக இருந்த திருப்பூர் தற்போது முன்னணி வர்த்தக மாவட்டமாக மாறியுள்ளது. அரசின் முயற்சியோ, முன்னணி நிறுவனங்களின் உதவியோ இல்லாமல் இங்கு உற்பத்தியின் அளவு வளர்ந்துள்ளது என்றால், அரசு உதவியுடன் வர்த்தகத்தை பல மடங்கு உயர்த்த முடியும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்திய நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். தொழில் நகரங்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தானும் வேலை செய்து, பிறரையும் வேலை செய்ய வைப்பதே மோடி அரசின் நோக்கம். தற்போது வளர்ச்சி பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது.
மின்பற்றாக்குறை
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை காரணமாக தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வார்த்தையளவில் தான் தமிழகத்தில் செயல்படுகிறது. ஆனால் குஜராத் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் இந்த திட்டம் அதிகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூலதனம் இருந்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். மூலதனம் என்ற மின்சாரம் இல்லாமல் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற 100 நாள்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11 குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டீசல் விலை குறைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விலைவாசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கடந்த வாரத்தில் 1½ கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. உலக தலைமைக்கு தகுதியான தலைவர் என்பதை மோடி நிரூபித்து காட்டியுள்ளார்.
மீனவர் பிரச்சினை
மேலும் தமிழக மீனவர் பிரச்சினையில் 5 பேர் கொண்ட தனி குழு அமைத்து தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் இரட்டை மடிப்பு வலைகளை பயன்படுத்துவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனால் இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடி உபகரணங்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனால் மீனவர்களுக்கான பிரச்சினையில் விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அராஜக போக்கை கடைபிடித்து வருகிறது. இதனையும் எதிர்கொண்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம். தமிழகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமையும் வாய்ப்பு விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: