Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப். 13– 

பாகிஸ்தானுக்காக தமிழ் நாட்டில் ஊடுருவி உளவு பார்த்த இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராசன் கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டான். மத்திய உளவு துறை கொடுத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். 

அருண் செல்வராசனிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சென்னையில் தீவிரவாதிகளை கடல் வழியாக ஊடுருவ செய்து மும்பை தாக்குதல் பாணியில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது. இது தவிர சென்னையில் 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ. தகவல்கள் சேகரித்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. 

இதற்கு உதவி செய்யும் வகையில் அருண் செல்வராசன் படங்கள், வீடியோ காட்சிகள் எடுத்து அனுப்பியுள்ளான். சென்னை சாலிகிராமத்தில் தங்கி இருந்து ஐஸ்ஈவென்ட் எனும் நிறுவனத்தை நடத்தியபடி உளவு பார்க்கும் சதி செயலை கடந்த 5 ஆண்டுகளாக அருண் செல்வராசன் நடத்தி வந்தான். தமிழ்நாட்டை தகர்க்க உளவு பார்த்ததோடு கொச்சி, விசாகப்பட்டினம் துறைமுகங்கள் பற்றிய தகவல்களையும் இவன் சேகரித்து கொடுத்துள்ளான். மேலும் சென்னையில் உள்ள மற்ற உளவாளிகளுக்கு ஐ.எஸ்.ஐ.–யிடம் இருந்து வரும் லட்சக்கணக்கான பணத்தை பிரித்து கொடுக்கும் வேலையையும் செய்து வந்தான். 

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த இவன், மூத்த விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கை அரசு இவனை தேடி வரும் நிலையில், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. நன்கு திட்டமிட்டு, இவனை கொழும்பில் இருந்து தப்ப செய்து, சென்னையில் குடியேற்றியுள்ளது. இவன் மீது யாருக்குமே சந்தேகம் வராததால், இவன் மூலம் பல தகவல்களை ஐ.எஸ்.ஐ. பெற்று விட்டதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக தமிழக கடலோரங்களில் எங்கெங்கு தீவிரவாதிகள் ஊடுருவ முடியும், சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நாசவேலை செய்து விட்டு எளிதில் தப்ப முடியும் என்பன போன்ற தகவல்கள் அருண் செல்வராசன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைக்கு ஏற்கனவே சென்று விட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கான ஒரு முன்னோட்டத்தை கூட நடத்தி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. 

இந்த பயங்கர சதி திட்டத்தை கண்டுபிடித்துள்ள தேசிய புலனாய்வு பிரிவினர் இதுபற்றி மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அருண் செல்வராசன் படம் பிடித்து அனுப்பியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோர பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இலங்கையில் இருந்து எளிதாக வந்து இறங்கும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம், கடலோர துறைமுகங்கள், முக்கிய ரெயில் நிலையங்கள், ராணுவ நிலைகள், வணிகம் அதிகம் உள்ள தெருக்கள், கோவில்களில் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய உளவாளியான அருண் சிக்கி இருப்பதால், அவன் கூட்டாளிகள் நாச வேலை முயற்சிகளில் ஈடுபடலாம் அல்லது தமிழ்நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்யக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

எனவே உளவாளிகளுடன் நெருக்கமாக இருப்பவர்களை உளவுப் பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

குமரி மாவட்ட கடலோர கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சகாய ஜோஸ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சின்னமுட்டம் துறைமுகம், குளச்சல் துறைமுகம், முட்டம் துறைமுகத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது வருகின்றனரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுப் புறங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

0 comments: