Monday, December 22, 2014

On Monday, December 22, 2014 by farook press in ,    
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல்டி ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாடு கோரியுள்ளது.
ஊத்துக்குளி தோழர் என்.ஆறுமுகம் நினைவரங்கில் (ஏ.பி.கே. திருமண மண்டபம்) மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை பேரெழுச்சியுடன் தொடங்கியது. இம்மாநாட்டில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் முன்வைத்த அறிக்கையின் மீது தொடர்ந்து இரண்டாவது நாளான செவ்வாயன்று பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், பத்து ஊராட்சி ஒன்றியங்களில் பல லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றவும், திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கவும், சொற்ப ஊதியத்தில் வாழ்க்கை நடத்தி வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் கந்து வட்டி கும்பலிடம் சிக்கி கடும் நெருக்கடியையும், அச்சுறுத்தலையும், கொலை மிரட்டல், தற்கொலைக்கு தூண்டுதலையும் சந்தித்து வருகின்றன. எனவே கந்து வட்டி கொடுமையைத் தவிர்க்க அரசும், காவல் துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி பிஏபி திட்டத்தை வலுப்படுத்த வேண்டும், போக்குவரத்து நெருக்கடியை போக்க கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை துரிதமாக கட்டி முடிக்க வேண்டும், ரேசன் கார்டு இல்லாத அனைவருக்கும் ரேசன் கார்டு வழங்க வேண்டும், பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகைகைளை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களில் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், காலி அரசுப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் தெற்கு பகுதியில் புதிய பேருந்து நிலையம், காலை மாலை மகளிர் சிறப்பு பேருந்து இயக்குதல், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு புகார் கமிட்டி அமைத்தல், இ.எஸ்.ஐ. மருத்துமனை கட்டுமானப் பணியை உடனே தொடங்குதல், முறைசாரா தொழிலாளர் நலவாரிய செயல்பாட்டில் தொழிற்சங்க பங்கேற்புடன் முறைப்படுத்துதல், திருப்பூரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைக்கும் பிற்போக்கு திருத்தங்களை கைவிட வேண்டும், மலைவாழ் மக்கள் வாழ்வாதரங்களைப் பாதுகாக்க வேண்டும், விசைத்தறி தொழிலையும், தொழிலாளர் வாழ்வையும் பாதுகாக்க வேண்டும், திருப்பூர் ரயில் நிலையத்தை ஒரு முனையமாக அறிவித்து இங்கிருந்து ரயில்களை இயக்க வேண்டும், காவல் துறை ஜனநாயகவிரோத, அத்துமீறல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், திருப்பூரில் பொழுதுபோக்கு அம்சங்கள் கலையரங்கம், பூங்காக்கள், படகு சவாரி மையம் அமைக்க வேண்டும், மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திருப்பூரில் அமைக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாட்டு உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும், கைத்தறி தொழிலாளர்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி பாதுகாக்க வேண்டும், மழையினால் சீர்குலைந்த அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
செவ்வாயன்று மாநாடு நிறைவடைகிறது. புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்படுகிறது. மாநாட்டின் நிறைவாக ஊத்துக்குளி ஆர்.எஸ். மேம்பாலம் பகுதியில் இருந்து பிரம்மாண்டமான உழைப்பாளர் பேரணி தொடங்குகிறது. ஊத்துக்குளி டவுன் பி.ராமமூர்த்தி நினைவுத் திடலில் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.


0 comments: