Saturday, December 27, 2014

On Saturday, December 27, 2014 by Unknown in ,    
குவாரி உரிமையாளர்கள் மிரட்டல்: சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் குமுறல்
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர்.
மதுரை அருகே மேலூர், கீழவளவு உள்பட பல பகுதியில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் அரசுக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி. நிறுவனம் உள்பட சில நிறுவனங்கள் மீது புகார் செய்யப்பட்டது.
மேலும் பலரது இடத்தை அபகரித்தும், மிரட்டியும் பெற்று கொண்டு கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாகவும் பலர் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து குவாரியில் நடந்த முறை கேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் மதுரைக்கு வந்து 2 கட்டமாக விசாரணை நடத்தினார்.
இந்த விசாணையின் போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மற்றும் கிரானைட் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள், போலீசார் என பலதரப்பு சார்பில் சகாயத்திடம் புகார் செய்தனர். மொத்தம் 312 புகார் மனுக்கள் குவிந்தன. 2–வது கட்ட விசாரணையின் போது சகாயம் மற்றும் அவரது குழுவினர் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் கிரானைட் குறித்து விசாரணை நடத்த சகாயத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கியதை தொடர்ந்து நேற்று மதுரைக்கு வந்து 3–வது கட்ட விசாரணையை தொடங்கினார். அப்போதும் பலர் புகார் மனு அளித்தனர். குறிப்பாக புது தாமரைபட்டியில் டைகர் ஜாங்கிட் நகரில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்ற போலீஸ் துறையை சேர்ந்த சங்கத்தினர் 46 பேர் கையெழுத்திட்ட மனுவை சகாயத்திடம் கொடுத்தனர்.
இதுகுறித்து சங்க தலைவர் கிருஷ்ணன் கூறும்போது:–
‘‘கடந்த 2001–ம் ஆண்டு போலீஸ் கமிஷனராக இருந்த ஜாங்கிட் முயற்சியால் போலீசாருக்கு வீட்டுமனைக்காக புது தாமரைபட்டியில் 27 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. முறையாக அனுமதி பெற்று 367 போலீஸ்துறையினருக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது. இதில் 4 பேர் மட்டும் வீடு கட்டினர். அந்த இடத்தின் அருகே பி.ஆர்.பி. நிறுவனத்தினர் வெடி வைத்து கற்கள் வெட்டி எடுத்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த குடும்பமே பாதிக்கப்பட்டது.
பி.ஆர்.பி. நிறுவனத்தினரின் மிரட்டலுக்கு பயந்து 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியாமலும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல முடியாத நிலையிலும் உள்ளோம். எனவே பயமின்றி வீடு கட்டி குடியிருக்க வழிவகை செய்து தரும்படி புகார் மனுவில் கூறி இருக்கிறோம்’’ மனுவை பெற்று கொண்ட சகாயம் குழுவினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக கூறினார்.
இன்னும் பலர் சகாயத்திடம் புகார் மனு கொடுத்தனர். அவர் தன் குழுவினருடன் மேலூர், கீழவளவு ஆகிய பகுதிகளில் உள்ள குவாரிகளில் மீண்டும் இன்று ஆய்வு செய்தார்.

0 comments: