Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமான காற்று வீசியது.

இந்தநிலையில் நேற்று இரவு 9.10 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. புரசைவாக்கம், வேப்பேரி, வில்லிவாக்கம், பெரம்பூர், திருவான்மியூர், அடையார், மைலாப்பூர், தாம்பரம் உள்பட பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது.

மரக்கிளைகள் முறிந்தன

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றும் வீசத்தொடங்கியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காஞ்சீபுரத்தில் நேற்று இரவு 7.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 2 மணிநேரத்துக்கு மேல் நீடித்தது. இதனால் நகரின் முக்கிய வீதியான மூங்கில் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருத்தணியில் உள்ள ம.பொ.சி. சாலை, காந்தி ரோடு, கந்தசாமி தெரு, கீழ் பஜார் தெரு உள்பட பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.

0 comments: