Wednesday, January 28, 2015

On Wednesday, January 28, 2015 by Unknown in ,    
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் பி.ஸ்டாலின், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறி இருப்பதாவது:–
ஊழல்வாதிகளை தண்டிக்க கொண்டு வரப்பட்ட ‘லோக்பால்‘, ‘லோக் அயுக்தா‘ மசோதா கடந்த 2013ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம் அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விரைந்து விசாரித்து தண்டிப்பது தான்.
இந்த சட்டம் 1.1.2014 முதல் அமலுக்கு வந்து விட்டது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் ‘லோக் அயுக்தா‘ அமைப்பை ஏற்படுத்த அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒரிசா, கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் ‘லோக் அயுக்தா‘ அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சட்டம் கொண்டு வரப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் தமிழகத்தில் ‘லோக் அயுக்தா‘ அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது. மக்களின் வரிப்பணம் ஊழல் காரணமாக சிலருக்கு போய் சேருகிறது. ஊழல் காரணமாக ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
‘லோக் அயுக்தா‘ அமைப்பு இருந்தால் தான் இத்தகைய முறைகேடுகளை களைய முடியும். எனவே, ‘லோக் அயுக்தா‘ அமைப்பை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு மனு அனுப்பினேன். அவர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த மனுவை பொதுத்துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்மூலம், தமிழகத்தில் ‘லோக் அயுக்தா‘ அமைப்பை ஏற்படுத்த தலைமை செயலாளர் விரும்பவில்லை என்பது தெரிகிறது. தமிழகத்தில் தற்போது கிரானைட் ஊழல், ஆவின்பால் ஊழல், சத்துணவு முட்டை கொள்முதல் செய்ததில் ஊழல், மின்சாரம் வாங்கியதில் ஊழல், மேகமலையில் மரம் வெட்டியதில் ஊழல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1 தேர்வில் ஊழல், சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், பள்ளிக்காவலர்கள் பணி நியமனத்தில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
எனவே ஊழல்வாதிகளை தண்டிக்கும் வகையில் தமிழகத்தில் ‘லோக் அயுக்தா‘ அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழ்வாணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் சட்டத்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தர விட்டார்

0 comments: