Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எங்கள் கட்சி ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தான் அறிவித்தோம். உள்ளாட்சி தேர்தலையே புறக்கணிப்பதாக கூறவில்லை. எனவே தான் ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலில் பணம், பதவி, அதிகார பலத்தை தாண்டி எங்கள் கூட்டணி வெற்றி பெறும். மது மற்றும் இலவசம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி 100 நாள் ஆட்சியில் அவரது வெளிநாட்டு பயணங்கள் மூலம் அண்டை நாடுடனான உறவு பலப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை, பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தது, சமஸ்கிருத வார விழா கொண்டாட அறிவுறுத்தியது உள்ளிட்ட விவகாரங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது.
ம.தி.மு.க. சார்பில் வருகிற 15–ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று சென்னையில் மாநில மாநாடு நடைபெறுகிறது என்றார்.
தி.மு.க. உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு குறித்த கேள்வியை நிருபர்கள் கேட்டபோது உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. புறக்கணித்திருப்பது அவர்களது ஜனநாயக முடிவு. அது பற்றி எதுவும் கருத்து கூற முடியாது என்றார்.
பேட்டியின் போது பா.ஜ.க. மாநில செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வக்குமார், மேயர் வேட்பாளர் நந்தகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: