Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
சுப்ரீம் கோர்ட்டு முன்னால் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். தன் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூர் கிராமத்துக்கு வந்து இருந்து அவர் கோவை வந்தார். அங்கிருந்து சென்னை புறப்பட்ட அவர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த ஏப்ரல் மாதம் 26–ந்தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிகாலம் முடிந்தவுடன், எந்த தனியார் துறை நிறுவனங்களுக்கோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கோ ஆலோசகராக கூட பொறுப்பு ஏற்க மாட்டேன் என்றும், சமரச தீர்வு மையங்களில் கூட பொறுப்பு ஏற்கமாட்டேன் என்றும் தெரிவித்து இருந்தேன். ஆனால் கேரள மாநில கவர்னராக பதவி ஏற்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 19 ஆண்டுகளாக நீதிபதியாக பதவி வகித்த எனக்கு அந்த அனுபவங்கள் காரணமாக கவர்னர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்ததாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுக்கு இடையே உள்ள உறவை மேம்படுத்த உதவுவேன்.
என்னை பொருத்த அளவில் அந்த மாநிலத்துக்கு பயன் அளிக்கக் கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவேன். நான் அரசியல்வாதியும் அல்ல. எந்த ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவனும் அல்ல. என்னிடம் உள்ள மிகச்சிறந்த அனுபவங்களை கேரள மாநிலத்துக்கு பயன்படுத்துவேன்.
நான் அமித்ஷா தொடர்பான எந்த வழக்கையும் தள்ளுபடி செய்யவில்லை. அவர் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் தேவைப்பட்டால் கூடுதலாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என்றுதான் சி.பி.ஐ.யிடம் கூறினேன். அப்போது அவர் பாரதீய ஜனதா தலைவர் ஆவார் என்று யாருக்கும் தெரியாது. ஒரு நீதிபதி தனி மனிதரிடமோ, அரசியல்வாதிகளிடமோ வழக்கு விவகாரங்களில் கருத்துகேட்பது கடமை.
நான் ஓய்வு பெற்ற பின் எந்த துறையிலும் பொறுப்பு வகிக்காததன் காரணமாக என்னை கவர்னர் பதவிக்கு மத்திய அரசு தேர்வு செய்து இருக்கலாம்.
நான் கவர்னராக பொறுப்பு ஏற்க எதிர்ப்பு கிளம்பினால், தேவைப்பட்டால் நான் என் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்று விவசாயத்தை பார்ப்பேன்.
இவ்வாறு பி.சதாசிவம் கூறினார்.
இதன் பின்னர் சென்னை வழியாக விமானம் மூலம் பி. சதாசிவம் திருவனந்தபுரம் சென்றார். கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.

0 comments: