Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
கோவையில் வசிப்பவர் சின்னத்துரை. இவருக்கு சொந்தமாக அன்னூர்–கோவை ரோட்டில் உள்ள கரியாம்பாளையத்தில் டெக்ஸ்டைல் மில்லும் கரியாக்கவுண்டனூரில் ஆயில் மில்லும் உள்ளது.
இந்த மில்களின் மானேஜராக கரியாக்கவுண்டனூரை சேர்ந்த பழனியப்பன் (வயது 54) என்பவர் பணிபுரிகிறார். மில் அதிபர் சின்னத்துரைக்கு சொந்தமாக அல்லிக்காரம் பாளையத்தில் பங்களா உள்ளது. அங்கு சின்னத்துரையின் தாய் உள்ளார்.
மானேஜர் பழனியப்பன் இந்த பங்களாவுக்கு அருகே வசித்து வருகிறார். இன்று மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதாக இருந்தது. அதற்கான பணத்தை எடுக்க இன்று காலை பழனியப்பன் மில் அதிபர் சின்னத்துரையின் பங்களாவுக்கு சென்றார்.
வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் பணத்தை பையில் வைத்து எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது வீட்டின் காம்பவுண்டுக்குள் ஹெல்மெட் அணிந்த ஒருவர் நுழைந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த மிளகாய் ஸ்பிரேவை பழனியப்பன் முகத்தில் அடித்தான். கண் எரிச்சலால் பழனியப்பனிடம் அலறி துடித்தார். இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம ஆசாமி பழனியப்பன் வைத்திருந்த ரூ.30 லட்சம் உள்ள பையை பறித்தான். அதிர்ச்சியடைந்த பழனியப்பன் சத்தம் போட்டார். அதற்குள் கொள்ளையடித்த பணத்துடன் அந்த மர்ம நபர் அங்கிருந்து வெளியேறினார். தடுமாறியபடியும் சத்தமிட்ட படியும் பழனியப்பன் அந்த நபரை பிடிக்க பின்தொடர்ந்து வந்தார்.
ஆனால் பிடிக்க முடியவில்லை. பணத்தை பறித்துக் கொண்டு வெளியே வந்த அந்த நபர் அங்கு கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இன்னொரு நபருடன் அங்கிருந்து கிளம்பினார்.
மோட்டார் சைக்கிளில் கொள்ளையன் ஏறும்போது பழனியப்பன் தடுத்தார். எனினும் அவரை தள்ளி விட்டு 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பினர். பணத்தை பறிகொடுத்த பழனியப்பன் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கொள்ளையர்களை பின் தொடர்ந்து தேடினர். ஆனால் அந்த கொள்ளையர்கள் ராயார்பாளைம், கருமத்தம் பட்டி வழியே தப்பி விட்டனர். பகல் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து மானேஜர் பழனியப்பன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் புறநகர் எஸ்.பி. சுதாகர் மேற்பார்வையில் கொள்ளையர்களை தேடும் பணி உடனே தொடங்கியது. நகரில் உள்ள அனைத்து செக்போஸ்ட், ரோந்து வாகனங்களுக்கு தகவல் பரவியது. கருப்பு மோட்டார் சைக்கிளில் 2 பேர் கையில் பையுடன் செல்கிறார்களா? என்று போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் டி.எஸ்.பி. கார்த்திகேயன், அன்னூர் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

0 comments: