Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
குனிமுத்தூர், செப். 13–
கோவை பொள்ளாச்சி ரோடு சிட்கோ எதிர்புறம் இண்டோசெல் டி.வி.எஸ். ஷோரூம் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று இரவு 9.30 மணிக்கு ஊழியர்கள் ஷோரூமை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது ஷோரூமின் மேற்கூரை துளையிடப்பட்டிருந்தது. மேஜை டிராயர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், கொள்ளையன் எந்த ஆயுதமும் இல்லாமல் துளையிட்டு கொள்ளையடித்து சென்றிருக்கிறான். ஷோரூமின் பக்கத்திலுள்ள மெயின் கேட்டில் காவலாளி கண் அசரும் நேரம் கொள்ளையன் உள்ளே நுழைந்திருக்கிறான். பின் வழியாக சென்று ஆஸ் பெஸ்டாஸ் சீட்டை பிரித்து உள்ளே நுழைந்து அருகிலிருந்த ஆக்ஸ்லாபிளேடு மூலம் மேற்கூரையை அறுத்து (அட்டை சீட்) துளையிட்டிருக்கிறான். பின்னர் பின் பக்கம் கிடந்த டியூப்பை எடுத்து அதனை மேலே கட்டி அதன் மூலமாக உள்ளே இறங்கியிருக்கிறான். சூடம் காட்டக்கூடிய கரண்டியை எடுத்து அதன் மூலமாக மேஜை டிராயரை குத்தி கிழித்து திறந்து உள்ளேயிருந்த பணம் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்திருக்கிறான். இது தவிர வேறு ஏதும் அவன் கையில் சிக்கவில்லை. ஏராளமான புதிய இரு சக்கர வாகனங்கள் உள்ளே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதை தூக்கி செல்ல முடியாத காரணத்தால் வேறு வழியின்றி வந்த வழியாக ஏறி சென்று விட்டான்.
இதையெல்லாம் பார்க்கும் போது அடிக்கடி ஷோரூமிற்கு வந்தவன் தான் நோட்டமிட்டு திருடியிருக்கிறான். புதிதாக யாரேனும் வந்து இந்தளவு நுட்பமாக திருட முடியாது என்று கூறினர்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போன்று அருகிலிருக்கும் பொருளை எடுத்து புதிய தொழில் நுட்ப முறையில் கொள்ளையடித்த கொள்ளையனை பற்றி சுந்தராபுரம், சிட்கோ முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

0 comments: