Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
வெள்ளமடம் அருகே உள்ள ஆண்டார்குளத்தில் நாயை விழுங்கிய மலைப்பாம்பை  வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
வெள்ளமடம் அருகே உள்ள ஆண்டார்குளம் அம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தையொட்டி வசிப்பவர் செல்லத்துரை (வயது 55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும், வீட்டில் ஒரு குட்டி நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் அந்த நாய் குரைத்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்து நாய் குரைக்கும் சத்தம் கேட்கவில்லை. உடனே செல்லத்துரையின் மருமகள் தீபா பின்னால் சென்று பார்த்த போது அந்த நாயை ஒரு மலைப்பாம்பு ஒன்று சுருட்டி விழுங்கி கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா உடனே அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். 
பொதுமக்கள் வந்த சத்தத்தை கேட்டதும் மலைப்பாம்பு நாயை கக்கிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சி செய்தது. உடனே, மீன் பிடிக்கும் ஒரு கருவியான ஊத்தாலைக் கொண்டு மலைப்பாம்பை பிடித்து வைத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, பூதப்பாண்டி வனசரக அலுவலர் ஸ்ரீ வில்சன் உத்தரவின் பேரில் வனகாப்பாளர் கிருஷ்ணன்குட்டி, தோட்டக்காவலர் தங்கப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு ஆரல்வாய்மொழி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த மலைப்பாம்பு பொய்கை காட்டுப்பகுதியில் கொண்டுவிடப்பட்டது. பிடிபட்ட இந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளமும், 70 கிலோ எடையும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

0 comments: