Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கு ஒரு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று திரும்பும் உங்கள் மகள்களிடமோ, அல்லது பணிக்கு செல்லும் மகள்களிடமோ இந்த தகவலை கூறிவிடுங்கள்.
சாலையோரமாக எந்த பகுதியிலாவது குழந்தை ஒன்று அழுதபடி கண்ணை கசக்கி கொண்டு நின்றிருந்தால் கண்டு கொள்ளாமல் வந்துவிட வேண்டும்.
அப்படி செய்யாமல் அந்த குழந்தையிடம் சென்று பேச்சு கொடுத்தால் அது குறிப்பிட்ட முகவரியில் கொண்டு விடச்சொல்லும். இதன்படி அக்குழந்தையை அழைத்துச் செல்பவர்கள் கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொள்வார்கள்.
அக்கும்பலை சேர்ந்தவர்கள் கையில் சிக்கும் பெண்களை கற்பழித்து விபசாரத்திலும் ஈடுபடுத்தி விடுவார்கள். எனவே உஷாராக இருக்குமாறு உங்கள் மகள்களை அறிவுறுத்துங்கள் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பள்ளியின் முதல்வர் கையெழுத்துடன் பெற்றோர்களுக்கு இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இந்த தகவலை மற்ற பெற்றோர்களுக்கும் சொல்லி உஷார்படுத்துங்கள் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவ தொடங்கியுள்ளது.
ஒரு சிலர் தங்களது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணைய தளங்களிலும் இந்த எச்சரிக்கை நோட்டீசை பரவவிட்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் முதல்வர் கூறும்போது, போலீசார் கொடுத்த தகவலின் பேரிலேயே இந்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் இருக்கும் பகுதி துணை கமிஷனரான (மயிலாப்பூர்) பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
இதுபோன்ற எந்த ஒரு தகவலையும் நாங்கள் பள்ளிக்கு கொடுக்கவில்லை. பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி ஒருவர் ஆக்ராவில் பணியாற்றுவதாகவும், அவர் கூறிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நோட்டீஸ் வினியோகிக்ககப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம். எனவே பெற்றோர்களை தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

0 comments: