Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
தண்டனையை கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்தார்“ என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பெங்களூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது. அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே. காரணம் இந்த வழக்கில் தொடர்புடைய சொத்துகளின் இன்றைய மதிப்பு அதைவிட அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27–ந் தேதி காலையில் தனிக்கோர்ட்டு கூடியதும் ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து தண்டனை விவரங்கள் 3 மணிக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். பின்னர் 4 மணிக்கு தண்டனை விவரங்களை அறிவித்தார். தண்டனையை கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார் என்பது அவரது முக பாவனையில் அறிய முடிந்தது.
அவர் மவுனமாக இருந்தார். யாரிடமும் பேசவில்லை. தீர்ப்பு முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. அது மொத்தம் 1,136 பக்கங்களை கொண்டுள்ளது. தீர்ப்பு நகல் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். அது கிடைத்ததும் தீர்ப்பை முழுவதுமு£க படிப்பேன். ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அறிந்தேன். அது பற்றி எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை.
ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதை முழுவதுமாக படித்த பிறகே கோர்ட்டில் எனது கருத்தை தெரிவிப்பேன். தீர்ப்பை படிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும். அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து எனக்கு அதிக நெருக்கடி இருந்தது. ஆனால் நான் அதற்கெல்லாம் பணியவில்லை. நான் எனது பணியை ஆற்றினேன்.
நான் எந்த தவறும் செய்யவில்லை. நேர்மையாக பணியாற்றினேன். ஆனால் என் மீது தி.மு.க. பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது. இது எனது மனதை பாதித்தது. ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்துவிடலாமா? என்று கூட ஆலோசித்தேன். ஆனால் இந்த வழக்கில் ஆஜராகி திறமையாக செயலாற்றி குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு தண்டனை பெற்று தந்துள்ளேன். என் மீது கூறப்படும் தவறான தகவல்களை நான் கண்டுகொள்வது இல்லை.
என் மீது குற்றச்சாட்டுகளை கூறியவர்கள்(தி.மு.க.) இப்போதாவது என்னை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. என் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை.
நான் எனது வக்கீல் பணியை 1975–ம் ஆண்டு தொடங்கினேன். கிரிமினல் வழக்குகளை கையாண்டு வருகிறேன். அரசு பிளீடராகவும், கூடுதல் சிறப்பு வக்கீலாகவும், அரசு சிறப்பு வக்கீலாகவும் பணியாற்றி உள்ளேன். கடந்த காலங்களில் தண்டுபாளையா உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளேன்.
முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா, தற்போதைய சட்டசபை சபாநாயகர் காகோடு திம்மப்பா உள்ளிட்ட முக்கியமான அரசியல் தலைவர்களின் வழக்குகளில் ஆஜராகி இருக்கிறேன். எனது வக்கீல் பணியில் இதுவரை ஆயிரக்கணக்கான வழக்குகளை கையாண்டு உள்ளேன். அதில் இந்த சொத்து குவிப்பு வழக்கும் ஒன்று என்று நான் கருதுகிறேன்.“

இவ்வாறு அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.

0 comments: