Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : ஆயுத பூஜை முடிந்ததும், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், "நிட்டிங்', "டையிங்', "காம்பாக்டிங்', "பிரின்டிங்' என பல்வேறு வகையான "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி என வெளிமாவட்டங்கள்; மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளிமாநிலத்தவர்கள், மெஷின் ஆப்ரேட்டர், செக்கிங், அயர்னிங், ஹெல்ப்பர் போன்ற பலவகையான பணிகளில், ஷிப்ட், ஒப்பந்த அடிப்படைகளில் பணிபுரிகின்றனர். 
தொழிலாளர்களுக்கு பணி அடிப்படையில், ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. போனஸ் பெற்றுக்கொண்டு, குடும்பத்துக்கு தேவையான பண்டிகை கால பொருட்களை வாங்கியும், சொந்த ஊர்களுக்கு சென்றும் பண்டிகையை கொண்டாடுகின்றனர், தொழிலாளர்கள். கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறையை துரத்திய பிரச்னைகளால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்களுக்கு வழங்கும் போனஸ் சதவீதமும், உயராமல் இருந்தது.தற்போது, பிரச்னைகள் நீங்கி, தொழில் துறை வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள் வசம் பண்டிகை கால ஆர்டர்களும், ஏற்றுமதி நிறுவனங்கள் வசம் குளிர்கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களும் உள்ளன. தீபாவளி நெருங்குவதால், பின்னலாடை நிறுவனங்களில் ஆடை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆர்டர்களை குறித்த நேரத்துக்குள் அனுப்புவதில், அக்கறை காட்டி வரும் தொழில் துறையினர், பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தயாராகி வருகின்றனர். விஜயதசமி, ஆயுத பூஜையை தொடர்ந்து, வரும் 3ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், பின்னலாடை துறையினரும், கூடுதல் போனஸ் வழங்க ஆலோசித்து வருகின்றனர்.

"டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ""ஆயுத பூஜை முதல், தொழிலாளர்களுக்கு படிப்படியாக போனஸ் பட்டுவாடா செய்ய, நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு 2 முதல் 5 சதவீதம் வரை கூடுதல் போனஸ் வழங்கப்படும்,'' என்றார்

0 comments: