Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
வையம்பட்டி பகுதியில் குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

வையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.வையம்பட்டி மற்றும் கருப்பரெட்டியபட்டி காலனி ஆகிய பகுதிகளில் சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், மரியபிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

முற்றுகை முயற்சி

இதே போல் கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்டோ நகர் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அப்பகுதி மக்கள் நேற்று மதியம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.இது பற்றி அறிந்த ஆணையர் லதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவங்களால் மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: