Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    

அவினாசி அருகே தெக்கலூரில் ஊருக்குள் புறவழிச்சாலை வழியாக சென்ற பஸ்களை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
அவினாசி ஒன்றியம் தெக்கலூர் திருப்பூர - கோவை மெயின்ரோட்டில் அவினாசியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு விசைத்தறிக்கூடங்கள் நூல்மில்கள், தனியார் கம்பெனிகள் அதிகளவில் உள்ளன.
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக ஏராளமான பொதுமக்கள் தினசரி தெக்கலூர் வந்து கோவை, திருப்பூர் மற்றும் அவினாசிக்கு வந்து போகின்றனர். இது தவிர பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவர்கள் பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து சென்று வரும் பஸ்கள் தெக்கலூருக்கு செல்லாமல் புறவழிச்சாலையில் சென்று விடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புறவழிச்சாலையில் சென்ற பஸ்களை சிறைபிடித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் வெளியூர் செல்ல தெக்கலூர் பஸ்நிறுத்தத்தில் காத்திருந்தோம். பஸ்கள் அனைத்தும் ஊருக்குள் வராமல் சென்று விடுகின்றன. இதனால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.
ஏற்கனவே பலமுறை பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து இனிமேல் பஸ்கள் அனைத்தும் ஊருக்குள் வந்து பயணிகளை இறக்கி ஏற்றி செல்லும் என்றனர். ஆனால் அவ்வாறு பஸ்கள் வருவதில்லை.
தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று வருகிறோம். எனவே அனைத்து பஸ்களும் தெக்கலூருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பஸ்களை சிறைபிடித்துள்ளோம் என்றனர்.
தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் துணை சூப்பிரண்டு ராமசாமி, வட்டார போக்கு வரத்து அலுவலர் பால சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அனைத்து பஸ் நிர்வாகிகளையும் வரவழைத்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

0 comments: