Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் கம்ப்யூட்டர் பழுதானது. இதனால் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென குடியுரிமை பகுதி, போர்டிங் பாஸ் வழங்கும் பகுதி ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர்கள் பழுதாகி செயல் இழந்தது.
அப்போது சென்னையில் இருந்து லண்டன், குவைத், கொழும்பு, மஸ்கட், பக்ரைன் உள்பட 10 நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனை மற்றும் குடியுரிமை சோதனை செய்வதற்காக நீண்ட வரிசையில் கவுண்ட்டர்களில் காத்து இருந்தனர்.
ஆனால் கம்ப்யூட்டர் பழுதானதால் விரைவாக சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தனர்.
இது பற்றி கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்களில் பலர் தசரா மற்றும் பக்ரீத் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதையடுத்து பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்து மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு காலை 7.30 மணி அளவில் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதுவரை பயணிகள் சோதனை மற்றும் போர்டிங் பாஸ் வழங்கும் பணிக்காக கூடுதலான ஆட்களை நியமித்து வழங்கப்பட்டன.
இதனால் 10 விமானங்களும் சுமார் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

0 comments: