Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
திருப்பூர் : தீபாவளி கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்காக, திருப்பூர் நகரில் "பார்க்கிங்' மற்றும் போக்குவரத்தை மாற்ற போலீசார் திட்டமிட்டுள்ளனர்; வரும் 17 முதல், போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில் துணிகள், நகை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வாங்க, சுற்றுப்பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு பொதுமக்கள் வரத்துவங்கி உள்ளனர். விடுமுறை நாளான நேற்று, திருப்பூரில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. துணி கடைகள், நகை கடைகள் அதிகமுள்ள புது மார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காமராஜர் ரோடு பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. டூவீலர், கார் உள்ளிட்டவை ரோட்டில் நிறுத்தப்பட்டதாலும்; புது மார்க்கெட் வீதியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்து வரும் நாட்களில், இது மேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க, புது மார்க்கெட் ரோடு வழியாக செல்லும் பஸ்களை, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் வழித்தடம் வழியாக அனுப்ப வேண்டும். காமராஜர் ரோட்டில் இருந்து புது மார்க்கெட் ரோடு செல்லும் வழித்தடங்கள் அனைத்திலும், வாகனங்கள் செல்ல தடை விதித்து, பொதுமக்கள் நடமாடுவதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். காமராஜர் ரோடு, மங்கலம் ரோடு, நடராஜா தியேட்டர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் விசாலமான இடங்களை தேர்வு செய்து, அங்கு வாகனங்கள் நிறுத்த அறிவுறுத்த வேண்டும். குமரன் ரோடு, அவிநாசி ரோடுகளில் "பார்க்கிங்' முறைப்படுத்துவதுடன், கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியில் நியமிக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, "தீபாவளியை ஒட்டி, போக்குவரத்து மாற்றம் மற்றும் "பார்க்கிங்' ஏரியா ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புது மார்க்கெட் வழியாக செல்லும் பஸ்களின் பாதை, தற்காலிகமாக மாற்றப்படும். புது மார்க்கெட் வீதி மற்றும் பிரிவு ரோடுகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும்; வரும் 17 முதல், போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரும். மக்கள் நெரிசலை கண்காணித்து ஒழுங்குபடுத்த, கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்படுவர்,' என்றனர்

0 comments: