Sunday, October 26, 2014

On Sunday, October 26, 2014 by Unknown   

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.
இதை செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி(Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. இதையறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாக கலக்கவிட்டனர். அன்றுமுதல் சூரியூரை சார்ந்த திரு. ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பதை நகர் ஊரமைப்பு துறை மூலம் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.
இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு “ உலக தண்ணீர் தினம் – 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டோம். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.
தற்போது வெளிவந்துள்ள “கத்தி” திரைப்படத்தின் மூலம் அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் “தண்ணீரின் அவசியமும், உரிமையும்” தெரியவந்துள்ளது. நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்கவேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணபசிக்கும், நம் நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக்கூடாது.
“கத்தி” திரைப்படத்தில் வரும் கற்பனை கதையை பார்த்துவிட்டு கண்ணீர் விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே !
சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்.
கரம் கொடுங்கள்
மாற்றி அமைப்போம்

Join With Us:
https://facebook.com/thanneer3
https://facebook.com/vinothraj.seshan
                                                           தண்ணீர் இயக்கம்
www.thanneer.org                                                வினோத்ராஜ் சேஷன்: 9500189319                                        ivfvinothraj@gmail.com

0 comments: