Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது.

வியாசர்பாடியில் பழமைவாய்ந்த ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. அது, மிகவும் தாழ்வாக இருப்பதால், கனரக வாகனங்கள் அடிக்கடி சிக்கின. இதைகருத்தில் கொண்டு, வியாசர்பாடி சுரங்கப் பாலத்திற்கு மாற்றாக, 80.68 கோடி ரூபாய் செலவில், 1,720மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை இணைந்து, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் பணிகளை துவக்கின. கடந்த 2013ம்ஆண்டு மார்ச் மாதத்தில், மேம்பாலப்பணியை முடித்து போக்குவரத்துக்கு திறந்துவிட திட்டமிடப்பட்டது.ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் இருந்ததால், மேம்பாலப்பணிக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒருவழியாக, ஆக்கிரமிப்புகள் அகற்றி, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தன.

ரயில்வே நிர்வாகம், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மேம்பால பணியை துவங்காமல் காலம் தாழ்த்தியது. மேம்பால பணியை, கடந்தாண்டு மார்ச் மாதம் ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் பழனிச்சாமி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.அதன்பிறகும், பணிகள் வேகமெடுக்கவில்லை. சமீபத்தில் நடந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்திலும், அக்., மாதத்திற்குள் மேம்பால பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டது.ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், துாண்கள் அமைக்கும் பணியே இன்னும் நிறைவடையவில்லை. இதனால், அக்., மாதத்திற்குள் மேம்பால கட்டுமான பணிகள் முடிய வாய்ப்பில்லை.

0 comments: