Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
மாமல்லபுரம் : கல்பாக்கம் அணுசக்தி வளாக கடற்பகுதியை, நவீன படகு மூலம் கண்காணிக்க, கடலோர பாதுகாப்பு குழுமம் முடிவெடுத்துள்ளது.

சென்னை, கல்பாக்கத்தில், இந்திராகாந்தி அணு ஆராயச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உட்பட முக்கிய அணுசக்தி நிறுவனங்கள் இயங்கி வரும் அணுசக்தி வளாகம் அமைந்துள்ளது. சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமான, மாமல்லபுரத்திற்கு தெற்கில், 3 கி.மீ., தொலைவில், கடலோர பகுதியில் இவ்வளாகம் உள்ளது. இவ்வளாகத்தை தகர்க்கப் போவதாக, பயங்கரவாதிகள், தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

காவல் நிலையம் அமைப்பு : இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அணுமின் நிலையம் உட்பட முக்கிய பகுதிகள், ராணுவ கட்டுப்பாட்டிலும், பிற பகுதிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,), கண்காணிப்பிலும் உள்ளன. சுற்றுப்புற பகுதி நவீன ரேடார் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடற்பகுதியை, கடலோர பாதுகாப்பு குழுமம் கண்காணித்து வருகிறது. பயங்கரவாதிகள், கடல் வழியே ஊடுருவி, மும்பை நகரை தாக்கியதை தொடர்ந்து, அத்தகைய ஊடுருவலை, இங்கு தவிர்க்க, கடற்பகுதி கண்காணிப்பிற்காக, சதுரங்கப்பட்டினம், முதலியார்குப்பம் மற்றும் கோவளம் ஆகிய இடங்களில், கடலோர காவல் நிலையம் அமைக்கப்படுகிறது.

ஆய்வு : இந்நிலையில், கல்பாக்கம் கடற்பகுதி கண்காணிப்பிற்கென, படகு துறை அமைக்கவும், இக்குழுமம் முடிவெடுத்துள்ளது.இங்கு, 500 மெ.வா., முன்மாதிரி அதிவேக ஈணுலை (பாவினி) நிலையத்திற்கு, கடல்நீர் கொண்டுவரும் ஜெட்டி பகுதி, பக்கிங்காம் கால்வாய், கடலில் கலக்கின்ற முகத்துவாரம் ஆகிய இடங்கள், படகு துறைக்காக ஆய்வில் உள்ளன.காவல் துறை கூடுதல் இயக்குனர் (கடலோர பாதுகாப்பு குழுமம்) சைலேந்திரபாபு, கடந்த 11ம் தேதி, இந்திராகாந்தி அணு ஆராயச்சி மைய மின்னணு பிரிவு இயக்குனர் சத்தியமூர்த்தி, சி.ஐ.எஸ்.எப்., கண்காணிப்பாளர் (கமாண்டன்ட் ) காமா உட்பட பலருடன், பாவினி பகுதியில் ஆய்வு செய்தார்.

அலை சீற்றத்தை தடுக்க...
இதுகுறித்து, மாமல்லபுரம் ஆய்வாளர் வேலு கூறுகையில், ''கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கடற்பகுதியை கண்காணிக்க, நவீன கருவிகளுடன் கூடிய ரோந்து படகு பயன்படுத்த உள்ளோம். படகை நிறுத்த, பாவினி ஜெட்டி பகுதியை ஆய்வு செய்து வருகிறோம். அங்கு, கடல் நீரேற்று பகுதியில் உள்ள கான்கிரீட் துாண்களில், இரும்பிலான இணைப்பை ஏற்படுத்தி, படகை நிறுத்தும் வசதி உள்ளது. படகை நிறுத்துவதற்கேற்ப, அலை சீற்றத்தை தடுக்க, நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். அங்கு இயலாவிட்டால், முகத்துவார பகுதியில் அமைக்கவும், ஆய்வு செய்கிறோம்,'' என்றார்.

0 comments: