Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை சென்ட்ரலில் மெட்ரோ, ரயில், பேருந்து போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டத்துக்கு, 389 கோடி ரூபாய் தேவைப்படும் என, நகர்ப்புற வளர்ச்சி துறை மதிப்பிட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை பெறுவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னையில், வண்ணாரப்பேட்டை- - விமான நிலையம், சென்ட்ரல் -- பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.இருவழித்தடங்களும், சென்ட்ரல், ஆலந்துார் ஆகிய இடங்களில் சந்திக்கின்றன.இரு மெட்ரோ வழித்தடங்கள், புறநகர் மின்சார ரயில், மேம்பால ரயில், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள், வெளி மாவட்டம், வெளிமாநில ரயில்கள் வந்து செல்வது என, பல்வேறு வகையான போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோரும் வந்து செல்லும் மிக முக்கியமான போக்குவரத்து முனையமாக இந்த சந்திப்பு அமைய உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில் உள்ள இப்பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஒருங்கிணைப்பு : ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி இங்கு வருவோர், இந்த சந்திப்பில் இன்னொரு போக்குவரத்து சேவைக்கு மாறுவதில் எவ்வித தடங்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் புறநகர் மின்சார ரயில், பூங்கா நகர் மின்சார ரயில், ரிப்பன் கட்டடம், அரசு பொது மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை பொதுவாகவும், ஒன்றுடன் ஒன்றும் இணைக்கும் வகையில், அதிநவீன நடைமேம்பாலம் அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை துறை உருவாக்கியது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என்பது குறித்து குழப்பம் நிலவும் சூழலில், இப்பகுதியில் பல்வேறு வகையான போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய திட்டம் : இதுகுறித்து நகரமைப்பு துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தம், 70 ஆயிரம் ச.மீ., பரப்பளவுக்கு பூமிக்கடியில், அடுக்கு தளங்களை கொண்டதாக அமைக்கப்படும், மெட்ரோ ரயில் சேவையை, மக்கள் எளிதாக பயன்படுத்த, பிற போக்குவரத்து சேவைகளுடன் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும். இதற்காக, 'சென்ட்ரல் ஸ்கொயர்' என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் பணிகள், நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில், 500 கார்கள், 1,000 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம், அனைத்து தரப்பு மக்களும், எளிதாக, வெவ்வேறு வகை போக்குவரத்து சேவைக்கு செல்லும் வகையில், ஆறு வழித்தடங்கள் அமைப்பது என, இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி இத்திட்டத்தை செயல்படுத்த, 389 கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை, கட்டுமான திட்ட அனுமதியின்போது வசூலிக்கப்படும் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து பெறுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: