Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை : சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும், கந்து வட்டிக்காரர்களின் 'அடாவடி' வட்டி வசூலில் இருந்து தப்பிக்க முடியாமல், கோர்ட் ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோர் கதறுகின்றனர்.

கந்துவட்டிக் கொடுமையால் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. சமீபத்தில், கந்து வட்டி சாவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. ஆனாலும், மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதில் 'கடுமை' காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கந்து வட்டிக்காரர்களின் நடவடிக்கை ஒரு படி மேலே போய், கடன் வாங்கியவர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துக்கொள்வது, பெண்களை சிறை வைப்பது, குழந்தைகளை கடத்துவது என, அடுத்தடுத்த இம்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பெரும்பாலும், தங்க நகை தொழிலாளர்கள், ஜவுளி விற்பனையாளர்கள், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் இக்கொடுமையில் சிக்கி தவிக்கின்றனர். கந்து வட்டி வசூலிப்பவர்களின் நடமாட்டம் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதில் ஒரு சில போலீஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பது, கொடுமையான விஷயம். பணத்தேவையில் கஷ்டப்படுவோரை தேடிப்பிடித்து உதவி செய்யும் கந்து வட்டி ஆசாமிகள், அடுத்தடுத்த தவணைகளில் பணத்தை திரும்ப பெறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், கடும் வார்த்தைகளால், அர்ச்சனை செய்கின்றனர். இதற்கு பணம் வாங்கியவர்கள் வாய் மூடியாகவே இருக்கின்றனர். கடன் பெற்றவர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கு ஈடாக, 'கையெழுத்திட்ட செக்'கை முன் கூட்டியே ஒப்படைத்திருப்பது தான் காரணம்.

இக்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியதன் விளைவு, கந்து வட்டி நபர்களை கைது செய்யவும், தடை செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இச்சூழலிலும், இக்கொடுமை வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கோர்ட் ஊழியர்களிடமும் பரவியுள்ளது. நீதிகேட்டு பாதிக்கப்படும் மக்கள் கோர்ட்களை அணுகி வரும் நிலையில், கோர்ட் ஊழியர்களே, கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் குடும்பத்தினரின் தொழில் அபிவிருத்திக்காகவும், குடும்பச் செலவுகளுக்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர். இதற்கு மூன்று ரூபாய் வட்டி தர சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடன் தொகையை கட்ட முடியாமல் திணறுகின்றனர். வசூலுக்கு வரும் கந்து வட்டி ஆசாமிகள், கோர்ட் ஊழியர்கள் முன்னிலையில், நாகூசும் வார்த்தைகளால் பெண்களை மட்டுமல்லாது, ஆண் ஊழியர்களையும் திட்டுகின்றனர்.கோவையில் மட்டும், 86 ஊழியர்கள் கந்து வட்டி ஆசாமிகளிடம் சிக்கியுள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் கோர்ட்களிலும் கந்து வட்டி ஆசாமிகளின் கைவரிசை நீண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வட்டியை கட்ட முடியாமல் அவதிப்படும் ஊழியர்கள் வேறு வழியின்றி, சக ஊழியர்களிடம் தங்கள் இயலாமையை தெரிவித்து அழுகின்றனர்.இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட நீதிபதியை சந்தித்து, தங்களை கந்து வட்டிக் கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என முறையிட உள்ளதாக கோர்ட் ஊழியர்கள் தெரிவித்தனர்.

0 comments: