Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைபாதை கடைகள் வைப்பதற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வணிக வளாகம்

சென்னை பாண்டிபஜாரில் நடைபாதை வியாபாரிகளுக்கென மாநகராட்சி வணிக வளாகம் கட்டிக்கொடுத்துள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 629 கடைகள் உள்ளன. வணிக வளாக கட்டிடத்தில் தரை தளத்தில் உள்ள கடைகளில் மட்டும் வியாபாரம் நடைபெறுகிறது.

1 மற்றும் 2-வது தளங்களில் உள்ள கடைகளுக்கு குறைவான வாடிக்கையாளர்கள் செல்வதால் போதுமான வியாபாரம் நடைபெறுவதில்லை. இதனால் வியாபாரிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், தியாகராயநகர் பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி இடத்தில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

இந்தநிலையில் நேற்று நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகத்தில் விற்பனை பாதித்த கடை உரிமையாளர்கள் 279 பேர் விழாக்காலத்தையொட்டி தற்காலிகமாக நடைபாதைகளில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கள் கடைகளை பூட்டிவிட்டு திரண்டு செல்ல முயன்றனர். தகவல் அறிந்த பாண்டிபஜார் போலீசார் அவர்களை வணிக வளாகத்தில் இருந்து வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து நடைபாதையில் பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து வியாபாரிகள் மீண்டும் தங்களது கடைகளை திறந்தனர்.

0 comments: