Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
ரூ.5 லட்சம் கடனுக்கு, ரூ.57 லட்சம் கேட்டு எவர்சில்வர் பாத்திர கம்பெனி அதிபரிடம் தொல்லை கொடுத்த பிரபல கந்துவட்டி மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சண்முகம்

சென்னை காரப்பாக்கம், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சொந்தமாக எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனி வளர்ச்சிக்காக, இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். சென்னை புரசைவாக்கம், கரியப்பா தெருவில் வசிக்கும் காமராஜ் (வயது 39) என்ற துணிக்கடை அதிபர், இந்த கடன் தொகையை கொடுத்துள்ளார். இவர் சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை வைத்துள்ளார்.

சண்முகம் தான் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியபிறகும், காமராஜ், வட்டிக்கு வட்டி கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கோர்ட்டிலும் வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

கந்துவட்டி புகார்

இதனால், சண்முகத்தின் மகன் டில்லிராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமராஜ் மீது புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறியதாவது:-

எனது தந்தை சண்முகம் தான் வாங்கிய ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிறகும், எனது தந்தை கடனுக்காக கொடுத்த சொத்து ஆவணங்களை காமராஜ் திருப்பி தர மறுக்கிறார். ஏற்கனவே பெற்ற ரூ.30.25 லட்சம் போக,மேலும் ரூ.27 லட்சம் கேட்டு, மிரட்டுகிறார். அவர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தந்தை கொடுத்த சொத்து ஆவணங்களை திருப்பி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காமராஜ் கைது

இந்த புகார் மனு மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கந்துவட்டிக்காரர் காமராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். அவரால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை கந்து வட்டி மன்னர், என்றே போலீசார் வர்ணித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள காமராஜின் குடும்பத்தினர், வேலூர் மாவட்டம், ஆம்பூரில் வாழ்கிறார்கள். காமராஜ் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தைரியமாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: