Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை ரெயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணியை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.
இந்தியாவை சுத்தப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் ‘தூய்மையான இந்தியா–2014’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க.வினர் இந்தியா முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் முக்கிய ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களில் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்னையில் ரெயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களிலும் ‘தூய்மையான இந்தியா’ திட்டம் ஒரேநேரத்தில் செயல்படுத்தப்பட்டது. ரெயில்வே அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. கழிப்பறைகள் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. ரெயில்வே தண்டவாளங்கள், காலனிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும், பணி செய்யும் அலுவலக வளாகங்கள் அடிக்கடி தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூறப்பட்டது.
இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்னை கோட்டை ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மின்சார ரெயிலில் ஏறி கோட்டை–தாம்பரம் மற்றும் தாம்பரம்–சென்னை எழும்பூர் மார்க்கம் வரை ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மின்சார ரெயிலில் வந்த பயணிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் பயணிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களிடம் ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்த முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் ராகேஷ் மிஸ்ரா தூய்மைப்படுத்தும் முகாமை ஏற்படுத்தி, அவரே ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.
அதேபோல் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே மகளிர் நல மேம்பாட்டு ஆணைய தலைவர் மஞ்சுளா மிஷ்ரா தலைமையில் நடந்த தூய்மை முகாமிலும் அவர் கலந்துகொண்டார்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், மூர்மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல மேலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தில் ஈடுபட்டனர். மனித சங்கிலி, பேரணி, கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் பொதுமக்கள்–பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
‘தூய்மையான இந்தியா’ திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ரெயில் நிலையத்துக்கு வரும் குழந்தைகளை கவர்வதற்காகவும், ரெயில்வே ஊழியர்கள் புகழ்பெற்ற ‘கார்ட்டூன்’ கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து இருந்தனர். தெற்கு ரெயில்வே முழுவதும் நடந்த சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி–கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தாம்பரத்தில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் நடந்த தூய்மையான இந்தியா விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் மண்டல முதன்மை ஆணையாளர் மதியழகன் தொடங்கி வைத்தார்.
இதில் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஏந்திய பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சென்றனர். இதில், ஆணையாளர்கள் முருகவேல், விஸ்வநாதன், பாலசுப்பிரமணியன், பிஜயந்த் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: