Thursday, November 20, 2014

On Thursday, November 20, 2014 by farook press in ,    
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற்காக திருப்பூர் மாவட்டத்தில் நவம்பர் 26ம் தேதி நூறு ஊராட்சிகளில் இயக்கம் நடத்துவதென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அதற்கு ஆதரவளித்த இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக 2005ம் ஆண்டு தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி கிராமப்புறங்களில் குடும்பத்திற்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் அரசு கட்டாயம் வேலை வழங்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக இந்த சட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழை கிராமப்புற குடும்பங்கள் பயனடைந்து வந்தன. பல நூறு கிராமங்களில் பட்டினிச் சாவுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் கிராமப்புறங்களில் புறம்போக்கு நிலங்கள், குளம், குட்டைகள் போன்ற பொதுச் சொத்துக்கள் தனியார்களின் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு, இச்சட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டன. 
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த இந்த சிறப்புவாய்ந்த சட்டத்தை சீர்குலைப்பதற்கு தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து, வேலை செய்யும் மாவட்டங்களின் எண்ணிக்கையுயம் குறைத்துவிட்டனர். கிராமப்புற மனித உழைப்பை புறந்தள்ளி இயந்திரங்களை பயன்படுத்த வழி செய்துள்ளது. இதனால் ஏழைகள் பயனடைவதற்கு மாறாக காண்ட்ராக்டர்கள் கொள்ளையடிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
எனவே இத்தகைய சூழ்நிலையில் ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை சீர்குலைப்பதை எதிர்த்தும், இச்சட்டத்தை பாதுகாத்து விதிகளை முழுமையாக அமல்படுத்தவும் வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய இயக்கம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புற மக்களிடம் இந்த விசயத்தை கொண்டு செல்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26ம் தேதியன்று உடுமலை ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் பணித்தளங்களில் கூட்டம் நடத்தப்படுகிறது, இந்த ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் உள்ள 7 ஊராட்சிகளை உள்ளடக்கி எரிசனம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. குடிமங்கலம் ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் பிரச்சாரப் பயணம் நடத்தப்படுகிறது. மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற பணியாளர்களை ஒன்றுதிரட்டி மடத்துக்குளம் நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அவிநாசி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் பணித்தளங்களில் தொழிலாளர்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படுகிறது. பல்லடம் ஒன்றியத்திலும் 10 ஊராட்சிகளில் பணித்தளங்களில் தொழிலாளர் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது. பொங்கலூர் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் இந்த இயக்கம் நடைபெறும்.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் மாலை நேர ஊர்க்கூட்டங்கள் நடத்தி விரிவான முறையில் தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. காங்கயம் மற்றும் வெள்ளகோவில் ஒன்றியங்களில் தலா 5 ஊராட்சிகளில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. இத்துடன் தாராபுரம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் தொழிலாளர் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது. இது தவிர திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளிலும் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் நூறு ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை சந்தித்து மத்திய அரசின் சீர்குலைவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் தெரிவித்துள்ளார்.

0 comments: