Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by farook press in ,    
நாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் வரை இந்த தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.–67) செல்கிறது. மொத்தம் 520 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் தென்னிலை மற்றும் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசிய நெஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. 10 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிப்பாதையான இந்த சாலையில் தற்போது அதிக அளவில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த 2 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகள் 2 மாத காலத்தில் முடிக்கப்பட்டு அரசின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள 10 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையில் சுங்கச்சாவடி அமைய உள்ள இடத்தில் மட்டும் மேலும் 15.40 மீட்டர் அகலத்திற்கு சாலை போடப்பட உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
தற்போது ரூ.2 கோடி மதிப்பில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி மட்டும் நடைபெறுகிறது. பணிகள் முடிந்த பின் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் என்பது முடிவு செய்யப்படும். எந்த எந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணங்கள் என்பது பின்னர்தான் தெரியவரும். எனவே தற்போதைக்கு சுங்கச்சாவடி பணியை மட்டும் முடிக்க உத்தரவு வந்துள்ளது. ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
தனியார் பராமரிப்பில் உள்ள தேசிய நெஞ்சாலைகளில் மட்டும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் இன்னும் விரிவாக்க பணிகள் முழுமையாக முடியவில்லை. மேலும் வெள்ளகோவில், காங்கயம், பல்லடம், சூலூர் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் கூட எடுக்கப்படாமல் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: