Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by farook press in ,    
திருப்பூர் பெரியார் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் ரவி என்கிற ராமலிங்கம்(வயது 48). இவர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். மேலும் திருப்பூர் மாநகரில் 3 கிளைகள் அமைத்து பேக்கரி நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக உள்ளார். இவருடையை மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரனேவ்(14), பிரனவ்(14) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இருவரும் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
ராமலிங்கத்துக்கு சென்னை தியாகராய நகர் நீலகண்டமேத்தாத் தெருவில் பனியன் எம்ப்ராய்டரி நிறுவனமும் வீடும் உள்ளது. பனியன் வர்த்தகம் தொடர்பாக சென்னையில் உள்ள எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு மாதம் ஒரு முறை வந்து அங்குள்ள வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த பணிகளை முடித்து விட்டு பின்னர் ராமலிங்கம் திருப்பூர் திரும்புவது வழக்கம்.
அதுபோல் ராமலிங்கம் சென்னையில் உள்ள எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு வந்துள்ளார். இந்தநிலையில் எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு அருகே உள்ள வீட்டில் ராமலிங்கம் தனியாக நேற்றுமுன்தினம் இரவு தங்கியிருந்தார். நேற்று காலை ராமலிங்கம் அறையில் இருந்து வெளியே வரவில்லை. ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ராமலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமலிங்கத்தின் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் ராமலிங்கத்தின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடல் திருப்பூர் கொண்டு செல்லப்படுகிறது.
ராமலிங்கம் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. என்றாலும் வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த திருப்பூர் தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

0 comments: