Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by farook press in ,    
மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கை, வகுப்புவாத அரசியல் இரண்டையும் எதிர்த்து டிசம்பர் 8ம் தேதி முதல் 14ம் தேதி முடிய நாடு தழுவிய அளவில் இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ள பிரச்சார இயக்கத்தை திருப்பூர் மாவட்டத்தில் நகர, ஒன்றியங்கள் அளவில் உள்ளூர் மட்டத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் செவ்வாயன்று இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் சி.பழனிசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு: நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை வெறித்தனமாக அமலாக்குவதோடு, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார அமைப்புகள் மதவெறியூட்டி மதமோதலை உருவாக்கக் கூடிய வகுப்புவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 
நாட்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை சீர்குலைக்கக் கூடிய முடிவை பாஜக அரசு எடுத்துள்ளது. அடுத்த நிதியாண்டிலிருந்து தமிழகத்தில் உள்ள 384 ஒன்றியங்களில் 198 ஒன்றியங்கள் மட்டுமே இத்திட்டம் அமலாகும். மேலும் இத்திட்டத்திற்கான நிதி குறைக்கப்படுவதோடு பல வகைகளில் இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு சீர்குலைத்து வருகிறது. மத்திய அரசினுடைய பொருளாதாரக் கொள்கையினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மாநில அரசினுடைய பால்விலை உயர்வு, உத்தேச மின் கட்டண உயர்வு மேலும் விலைகளை உயர்த்திடும் அபாயம் உள்ளது. 
மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பதோடு பெட்ரோல் - டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. பன்னாட்டு, உள்நாட்டு கம்பெனிகளுக்கு சலுகையளிக்கக் கூடிய மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்திட முனைந்துள்ளது. ஆலை மூடல், ஆட்குறைப்பினால் தொழிலாளர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா கருத்தியலை கல்வி, ஊடகம் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் திட்டமிட்டு புகுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்களை உருவாக்கி வருகிறது. சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றன. 
பெண்கள் மீதான பாலின ஒடுக்குமுறைகளும், தலித் மக்கள் மீதான வன்கொடுமை சாதிய ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. 
நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் துவங்கிய பிறகு அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், அதிகாரிகள் இணைந்து நடத்தும் ஊழல்கள் அதிகரித்து வருகின்றன. இயற்கை வளம் கொள்ளை போகிறது. 
மேற்கண்ட பிரச்சனைகள் மீது தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் டிசம்பர் 8-14 தேதிகளில் தெருமுனைக் கூட்டம், அரங்கக் கூட்டம், பொதுக்கூட்டங்கள் போன்ற முறையில் ஒரு வார காலம் பிரச்சார இயக்கம் நடத்துவதுதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளின் நகர, ஒன்றிய இடைக்குழுக்கள் அளவில் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இரு கட்சிகளின் இடைக்குழு நிர்வாகிகள் கலந்து பேசி விரிவான முறையில் இயக்கத்தை நடத்தவும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

0 comments: