Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by Unknown in ,    
திருப்பூரில் காய்ச்சலுக்கு இரு குழந்தைகள் இறந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த ஆப்செட் தொழிலாளி மயில்சாமியின் இரண்டாவது மகள் பிருந்தா (2). காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதேபோல், சூர்யா காலனியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் சுபலட்சுமி (6) டிசம்பர் 27-ம் தேதி உயிரிழந்தார். இவ்விரு குழந்தைகளும் டெங்கு பாதிப்பால்தான் இறந்ததாக தகவல் பரவியதால், அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநகர சுகாதார பிரிவு சார்பில் கடந்த இரு நாள்களாக அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த இரு நாள்களில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், யாருக்கும் இதுவரை டெங்கு பாதிப்பு அறிகுறி இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
இதற்கிடையே, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் கொசு மருந்துகள் தெளிப்பு, தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் தூர்வாறும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ், ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட அவர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகர சுகாதார அலுவலர் செல்வக்குமார், மாமன்ற உறுப்பினர் முருகசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: