Tuesday, January 06, 2015

On Tuesday, January 06, 2015 by Unknown in ,    
மதுரையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் காலி குடங்களுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிண்ணி மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சரிவர குடிநீர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், பஞ்சாயத்து தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீர் கிடைக்காததால் கடும் அவதி அடைந்து வருகிறோம். நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கிடைக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இல்லை. இதனால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே இதுதொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கல் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

0 comments: