Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    
ஊதியூர் அருகே பஸ்நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுவந்த 2தனியார் பஸ்களை பயணிகள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் ஊதியூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வஞ்சிபாளையம் பிரிவில் நிழலி, கவுண்டம்பாளையம், செட்டிபாளையம், பங்காம்பாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பனியன் கம்பெனி தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பஸ்ஏறி திருப்பூர், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த வழியாக இயக்கப்படும் 2தனியார் பஸ்கள் வஞ்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்காமல் செல்வதாகக் கூறி நேற்று காலை 10.30மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த 100பேர் 2தனியார் பஸ்களையும் சிறைப்பிடித்தனர்.
இதில் ஒரு தனியார் பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்து எனது பஸ் ரோட்டில் ஓடவில்லையென்றால் வேறு எந்த பஸ்சும் ஓடவிடமாட்டேன் என்று கூறி பஸ்சை ரோட்டின் குறுக்காக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து பொதுமக்களே வேறு வழியை ஏற்படுத்தி மற்ற வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.
தகவலறிந்த ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேசி சமாதானம் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பஸ்கம்பெனி நிர்வாகிகளுடன் பேசி இனி முறையாக பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பஸ்களை 12.30மணிக்கு விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது கடந்த 2வருடத்திற்கு முன்பு இதேபோல பஸ்களை நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து நாங்கள் சாலைமறியல் செய்வதாக அறிவித்தோம். உடனே காங்கயம் தாசில்தார் எங்களையும் பஸ்கம்பெனி நிர்வாகிகளையும் அழைத்து முறையாக நின்று செல்ல அறிவுறுத்தினார். அதையடுத்து கடந்த 1வருடமாக நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் நிற்காமல் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனாலேயே பஸ்சை சிறைப்பிடிக்கவேண்டியதாயிற்று என்றனர்.

0 comments: