Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மடத்துக்குளத்தை அடுத்த கணியூரில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8–ந்தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கணியூரில் நேற்று நடைபெற்ற மகளிர் தின விழாவை மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு தினமாக கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் தலைமை தாங்கி பேசினார். சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
முன்னதாக வக்கீல் ஸ்ரீரஞ்சனி செல்வராஜ் வரவேற்றார். பள்ளியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ– மாணவிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் பரிசுகளை வழங்கி பாராட்டினர். மணி மொழி தமிழ்வாணன் குத்துவிளக்கு ஏற்றினார். நீதிபதி தமிழ்வாணன் பேசும்போது கூறியதாவது:–
உலகளவில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்களும் உள்ளனர். அதாவது உலகில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஆனால் பெண்களுக்கான சமஉரிமை எந்த காலத்திலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் கிடைக்கும். பெண்கள் விழிப்புணர்வு வரவேண்டுமானால் முதலில் கல்வியறிவு வேண்டும். பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும். சிந்தனைப்பூர்வமான மாற்றம் வேண்டும்.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் மருத்துவர். அவர் மருத்துவக்கல்லூரியில் சேர முயற்சி எடுத்தபோது பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியதிருந்தது. ஆனால் இன்று மருத்துவ உலகில் பெண்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த வழக்கறிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான கிளாரா செட்கிள் என்பவர் 1911–ம் ஆண்டு 15 ஆயிரம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார். அதன்பிறகு 1913–ம் ஆண்டு முதல் மார்ச் 8–ந்தேதி மகளிர் தினமாக உறுதி செய்யப்பட்டது.
ஆற்றல் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உண்டு. சட்டம் சமுதாயத்தை வழி நடத்துகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சட்டங்களுக்கெல்லாம் சட்டம். அதுவே மத்திய, மாநில அரசுகளையும் கோர்ட்டின் அதிகாரங்களையும் முடிவு செய்கிறது. அதில் எந்த ஒரு நபரையும் மதம், இனம், மொழி, சாதி, ஆண், பெண் என்பதை வைத்து பாகுபடுத்தக் கூடாது என்று சொல்கிறது.
அதன்படி பெண் என்பவர் ஆணுக்கு சமமானவள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரதியின் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்ணாகவே தன்னைப் பாவித்துப்பாடிய பாரதியின் வழியில் பெண்கள் முன்னேற்றம் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மடத்துக்குளம் தாசில்தார் சண்முகவடிவேல், மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் சங்க தலைவர் நெடுஞ்செழியன், உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதிகள், சென்னை உயர்நீதி மன்ற வக்கீல்கள், கணியூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: