Thursday, December 15, 2016

On Thursday, December 15, 2016 by Unknown in    

மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கியில் செல்லாத நோட்டுகளைத்தான் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிகமாக செலுத்தி வருகிறார்கள். வங்கியில் பெற்றுச்செல்லும், புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள் மீண்டும் வங்கிக்கு வருவதில்லை. இதனால் வங்கி நிர்வாகம் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பணத்தை வழங்க முடியாமல் தவித்து வருகின்றன.

அதே நேரம் திருப்பூரில் உள்ள வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியில் இருந்து போதிய அளவு பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வங்கிகளில் தினமும் வரும் பணத்தை பொறுத்து வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கி, ரூ.4 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை வினியோகம் செய்து வருகின்றன.

வங்கிகளில் நீண்ட வரிசை

இதன்காரணமாக தினமும் வங்கிகள் முன்பு காலை 7 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கி விடுகின்றனர். காலை 10 மணிக்கு வங்கி திறக்கும் நேரத்தில் ஒரு வங்கியில் குறைந்தது 300 முதல் 500 பேருக்கு மேல் திரண்டு விடுகிறார்கள்.

பிரச்சினையை சமாளிப்பதற்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு டோக்கன் வழங்கி வருகிறார்கள். சில வங்கிகளில் 400-க்கும் மேற்பட்டோர் இருந்தாலும் தங்கள் வங்கியில் உள்ள பணம் கையிருப்பை பொருத்து 200 முதல் 300 டோக்கன்களை மட்டுமே வழங்குகின்றன. ஆனால் வரிசையில் நின்று டோக்கன் கிடைக்காத பொதுமக்கள், தங்களுக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் சாலைமறியல்

இந்த நிலையில் திருப்பூர்-மங்கலம் ரோட்டில் டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள ஒரு வங்கியில் நேற்று காலை 500-க்கும் மேற்பட்டோர் பணம் எடுப்பதற்காக திரண்டு நின்றனர். ஆனால் வங்கி நிர்வாகம் 300 பேருக்கு மட்டுமே பணம் கொடுக்க டோக்கன் வழங்கியது. இதனால் டோக்கன் கிடைக்காதவர்கள், வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வங்கி முன்பு சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து சாலைமறியலை கைவிடச்செய்தனர். பின்னர், டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் அனைவரும் வங்கியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து வங்கி நிர்வாகம், மீதம் உள்ளவர்களுக்கு டோக்கன் வழங்குவதாகவும், ஆனால் அவர்களுக்கு நாளை(இன்று) தான் பணம் வழங்க முடியும் என்றும், நாளை யாருக்கும் டோக்கன் வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்கள்.

இதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, வங்கி நிர்வாகம் அவர்களுக்கு டோக்கன் வழங்கியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: