Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by Unknown in ,    
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் உற்பத்தி செய்த பொருள்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சி திருப்பூரில் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட தொழில் மையம் சார்பில் அனுப்பர்பாளையம் எஸ்.எம்.திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னராமசாமி தொடங்கி வைத்தார்.
இதில், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் மானியத்துடன் தொழில் தொடங்கியுள்ள பயனாளிகளின் உற்பத்திப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள், ஹாலோ பிளாக், சாம்பல் கற்கள், பேப்பர் கப், தேங்காய் எண்ணெய், உலோகப் பாத்திரங்கள், பாக்கு மட்டை தட்டுகள் உள்ளிட்ட உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், கணினி இணையதள மையம், அழகு நிலையம் போன்ற தொழில்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகின்றன.
இதில், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னராமசாமி பேசியது:
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் தொடங்கப்படும் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 25 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 35 சதவீத மானியமும் வழங்கப்படும். நகர்புற பகுதிகளில் தொடங்கப்படும் வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 15 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 25 சதவீத மானியமும் வழங்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழு மூலமாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தில், 2014-15ஆம் ஆண்டில் 48 பேருக்கு ரூ. 1.95 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பி.ரங்கசாமி, உதவிப் பொறியாளர் ஜி.திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வரை நடைபெற உள்ளது

0 comments: