Tuesday, March 10, 2015

On Tuesday, March 10, 2015 by farook press in ,    
உடுமலைபேட்டையில் சனியன்று இரவு நடத்தப்பட்ட கலை இரவு நிகழ்ச்சியில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது காவல் துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) வலியுறுத்தியுள்ளது.
தமுஎகச திருப்பூர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமையில் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூரில் மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள தமுஎகசவின் 13வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர் ஐ.மாயாண்டி பாரதி, திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உடுமலைபேட்டை கிளை சார்பில் சனியன்று குட்டை மைதானத்தில் மாபெரும் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கையில் காவிக் கொடிகளை ஏந்திக் கொண்டு, குடிபோதையில் 10 பேர் கொண்ட கும்பல் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளது. மோடி, ராமர், கோட்சே குறித்து பேசக் கூடாது என்று மிரட்டல் விடுத்து, இருக்கைகளை தூக்கி வீசியுள்ளனர். கலை இரவில் பங்கேற்ற மக்கள் இவர்களது அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடன் தப்பியோடிய கும்பல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறது.
காவல் துறையிடம் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட கலை இரவு நிகழ்ச்சியில் ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையிடம் தமுஎகச உள்ளிட்ட கலை இரவில் பங்கேற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் உடுமலை காவல் துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கலை இரவு நிகழச்சியை முடித்துக் கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர். 300க்கும் மேற்பட்டோரின் முற்றுகை போராட்டத்துக்குப் பிறகு கலை இரவு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக, தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், புதுகை துரை குணா ஆகியோர் மீது வலதுசாரி மதவெறி, சாதிவெறி சக்திகள் தாக்குதல், மிரட்டல் விடுத்துவரும் பின்னணியில் உடுமலையில் திட்டமிட்டே மதவெறியர்கள் இந்த சீர்குலைவு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. எனவே இந்த சம்பவத்திற்கு தமுஎசக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. 
அதேசமயம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரான மதவெறி சக்திகளின் சீர்குலைவு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறை, மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதுடன், பாதிக்கப்படுவோர் மீதே நடவடிக்கை எடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்க எடுக்க வேண்டும் என்று தமுஎகச திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

0 comments: