Thursday, April 02, 2015

On Thursday, April 02, 2015 by Unknown in ,    
மேலூர் பகுதியில் லாரிகளில் கிரானைட் கற்கள் கடத்தப்படுகிறதா?: சகாயம் குழுவினர் அதிரடி சோதனைமதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்கும் முயற்சிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா 2 வழக்குகளும், தற்போதைய கலெக்டர் சுப்பிரமணியன் 144 வழக்குகளும், மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதில் பி.ஆர்.பி. உள்பட பல நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் பல இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்குவதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் நில அளவையர்கள் மூலம் அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட கிரானைட் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனுடன், கனிம வள உதவி இயக்குநர் ஆறுமுகநயினார், துணை தாசில்தார் இளமுருகன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மேலூர் பகுதிகளில் பல இடங்களில் மேலும் கிரானைட் கற்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் அரசுடமையாக்க கோரி மேலும் 20 வழக்குகள் வரை விரைவில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

இந்த நிலையில் மேலூர் மற்றும் திருவாதவூர் பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் அனுமதி பெறாமல் லாரிகளில் கடத்தப்படுவதாக சகாயம் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சகாயம் குழுவை சேர்ந்த ஆல்பர்ட், வேளாண் உதவி இயக்குநர் ஜெயசிங் ஞானதுரை மற்றும் அதிகாரிகள் மேலூர் பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக அனைத்து லாரிகளையும் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது 3 லாரிகளில் கிரானைட் கற்கள் ஏற்றப்பட்டு வந்தது. அதனை நிறுத்தி அதிகாரிகள் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கிரானைட் கற்களை லாரிகளில் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்களை காண்பித்தனர். அதனை தொடர்ந்து அந்த 3 லாரிகளும் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்

0 comments: