Wednesday, April 08, 2015

On Wednesday, April 08, 2015 by Unknown in ,    
திருப்பூர், தென்னம்பாளையம் செல்வபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் பொது பயன்பாட்டுக்கான ரூ. 2 கோடி மதிப்பு உடைய நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
   திருப்பூர் மாநகராட்சி, 50-ஆவது வார்டு தென்னம்பாளையம், செல்வபுரம் பகுதியில் பொது பயன்பாட்டுக்கான 18 சென்ட் நிலம் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, செல்வபுரம் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் நிலத்தை பராமரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன் உத்தரவின் பேரில், 4-ஆவது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், திருப்பூர் தெற்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றனர்.
நிலத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு, ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
  மேலும் மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சியினர் கம்பி வேலி அமைத்து, அந்த இடத்திற்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனர்.

0 comments: