Wednesday, April 08, 2015

On Wednesday, April 08, 2015 by Unknown in ,    



காங்கயம் நகரில் பயணிகள் நிழற்குடை முன்பு பேருந்துகள் நிற்காததால், பயணிகள் பல ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் நின்றுகொண்டு பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
காங்கயம் நகரம், கோவை சாலை ரவுண்டானா அருகில் வட்டாட்சியர் அலுவலகம், காவல்நிலையம், தபால் நிலையம், பிஎஸ்என்எல் ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளன.
இதில், கோவை மற்றும் அதன் வழியில் உள்ள ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக தனியார் நிறுவனத்தின் சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டு, நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அந்த நிழற்குடை முன்பு பேருந்துகள் நிற்காமல், சில அடி தூரம் தள்ளியுள்ள நெரிசலான பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இதனால், நிழற்குடை இருந்தும் பேருந்துக்காக நீண்டநேரம் பயணிகள் வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த நிழற்குடை முன்பு பல ஆண்டுகளாக பேருந்துகள் நிற்காததால், நகராட்சி நிர்வாகமும் சரியான முறையில் நிழற்குடையைப் பராமரிக்கவில்லை.
அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பது மட்டுமல்லாமல, மனநலம் பாதித்தவர்கள் மற்றும் மதுபோதை மீறியவர்கள் எந்த நேரமும் நிழற்குடையில் படுத்திருக்கின்றனர்.
இதேபோல, பழையகோட்டை சாலை, போக்குவரத்து நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக டைல்ஸ் பதிக்கப்பட்டு அழகிய முறையில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை முன்பும் பேருந்துகள் நிற்பதில்லை.
இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறியபோது, பேருந்து நிழற்குடைகள் பாதுகாப்பான இடங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல், விபத்து நிகழ வாய்ப்புள்ள இடங்களில் பேருந்துகள் நின்று செல்கின்றன.
இந்த நிலையை மாற்ற போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

0 comments: